தாய்லாந்து பிரதமர் ஜெனரல் ப்ரயூத் சான் ஓ சா (Prayut Chan-o-cha) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பிரகாரம் அவர் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தாய்லாந்து பிரதமரை வரவேற்பதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று மாலை ஜனாதிபதியின் தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இதன்பின்னர் இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் பேச்சுவாரத்தைகள் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இதன்போது, இருநாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், கைதிகளைப் பரிமாற்றிக் கொள்ளுதல் மற்றும் குற்றவியல் தண்டனைகளை அமுல்படுத்துவதற்கான உடன்படிக்கை, பொருளாதார உடன்படிக்கை, பேண்தகு சமூக அபிவிருத்தி நடவடிக்கை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டிற்கு வருகைதரவுள்ள தாய்லாந்து பிரதமர் ஜெனரல் ப்ரயூத் சான் ஓ சா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நாளை காலை சந்திக்கவுள்ளார்.
இதன்போது, பொருளாதார ஒத்துழைப்புகள், வியாபாரம் மற்றும் முதலீடுகள் போன்ற விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கண்டிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜெனரல் ப்ரயூத் சான் ஓ சா, மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளதுடன், பேராதனை தாவரவியல் பூங்காவில் மரக்கன்றொன்றையும் நாட்டவுள்ளார்.