உலகக் கிண்ணக் கால்பந்தாட்டம்: இறுதிப் போட்டிக்கு குரோஷியா தகுதி

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டம்: இறுதிப் போட்டிக்கு குரோஷியா தகுதி

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டம்: இறுதிப் போட்டிக்கு குரோஷியா தகுதி

எழுத்தாளர் Staff Writer

12 Jul, 2018 | 8:01 am

வரலாற்றில் முதல்தடவையாக உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டிக்கு குரோஷியா தகுதி பெற்றுள்ளது.

முன்னாள் சம்பியனான இங்கிலாந்துடன் நேற்று நடைபெற்ற 2ஆவது அரை இறுதியில் வெற்றி பெற்றமையினூடாக குரோஷியாவுக்கு இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

இதன்பிரகாரம், மொஸ்கோவில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் குரோஷியா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதவுள்ளன.

79,000க்கும் அதிகமான ரசிகர்களின் பங்குபற்றலுடன் இங்கிலாந்து மற்றும் குரோஷிய அணிகள் நேற்று அரை இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

மொஸ்கோவிலுள்ள லுஸ்னினி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆட்டம் ஆரம்பித்து 5ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் கிரன் டிரிப்பர் அபாரமாக ஒரு கோலைப் போட்டு தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதனையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதி வரை குரோஷியா கோல் அடிக்காமையால், முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இதனையடுத்து, 2ஆவது பாதியில் குரோஷிய அணி வீரர்கள் கடுமையாக போராடியமையின் பலனாக 68 ஆவது நிமிடத்தில் குரோஷிய வீரர் இவான் பெர்சிக் ஒரு கோலை போட, இரு அணிகளும் 1 – 1 என்ற கணக்கில் சமனிலை வகித்தன.

இரண்டாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷிய வீரர் மாரியோ மாண்ட்சிக் 109 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை போட்டதைத் தொடர்ந்து, குரோஷிய அணி அபாரமாக விளையாடி இங்கிலாந்தை 2 – 1 என்ற கணக்கில் வீழ்த்தியதுடன், இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்