விமான நிறுவனத்திற்கு அரச வங்கிகள் கடனுதவி

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு இரண்டு அரச வங்கிகள் கடனுதவி

by Staff Writer 11-07-2018 | 8:06 PM
Colombo (News 1st)  ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் 13.5 பில்லியன் ரூபா கடனை செலுத்துவதற்காக இரண்டு அரச வங்கிகளிலிருந்து கடன் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடனைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக டெய்லி மிரர் பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டிருந்தது. பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி கடனை வழங்குவதற்கான செயற்பாடுகளில் குறித்த அரச வங்கிகள் ஈடுபட்டு வருகின்றன. விமான நிலையத்தை புனரமைக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்தி, நிறுவனத்தை அபிவிருத்தி செய்வதற்கு தகுதியான முதலீட்டாளர் ஒருவரை இணைத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சரவையின் மகஜரை ஆராய்ந்த நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதும் விமான நிறுவனம் 13 பில்லியனுக்கும் அதிகக் கடனை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது. இந்த வாரத்திற்குள் 800 மில்லியனை செலுத்தி, எஞ்சிய தொகையை தனியார் வங்கியொன்றில் பெற்றுக்கொள்ளும் கடன் மூலம் செலுத்துவதாக அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இணக்கம் காணப்பட்டது. எனினும், தற்போது பிரதம நிறைவேற்று அதிகாரி ஒருவர் இல்லாத நிலையில், கடன் பெறுவது என்பது மீண்டும் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் செயற்பாடாக அமையும் என இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜானக விஜேபத்திரன தெரிவித்தார்.