தாஜ்மஹாலை மீட்டெடுங்கள் அல்லது இடித்துத்தள்ளுங்கள்

தாஜ்மஹாலை மீட்டெடுங்கள் அல்லது இடித்துத்தள்ளுங்கள்: இந்திய உச்ச நீதிமன்றம் ஆவேசம்

by Bella Dalima 11-07-2018 | 7:02 PM
சுற்றுச்சூழல் சீர்கேட்டிலிருந்து தாஜ்மஹாலை மீட்டெடுங்கள் அல்லது இடித்துத்தள்ளுங்கள் என்று இந்திய உச்ச நீதிமன்றம் மத்திய அரசைக் கண்டித்துள்ளது. தாஜ்மஹாலைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் காற்று மாசு மற்றும் மரங்களை அழித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளால் உண்டாகும் பாதிப்புகளில் இருந்து, தாஜ்மஹாலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லியைச் சேர்ந்த சூழலியலாளர் மேத்தா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான முந்தைய விசாரணைகளின் பொழுது தாஜ்மஹாலை பாதுகாக்க எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தர பிரதேச மாநில அரசு, மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் துறை ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி இருந்தது. ஆனால் அது தொடர்பாக போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், சுற்றுச்சூழல் சீர்கேடுகளில் இருந்து தாஜ்மஹாலை மீட்டெடுங்கள் அல்லது இடித்துத்தள்ளுங்கள் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசைக் கண்டித்துள்ளது.