மாகாணசபைத் தேர்தலை ஜனவரியில் நடத்த முடியும்

மாகாணசபைத் தேர்தலை ஜனவரியில் நடத்த முடியும் - மஹிந்த தேசப்பிரிய

by Staff Writer 10-07-2018 | 7:46 AM
Colombo (News 1st) மாகாண சபைகள் 6இற்கான தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி நடத்துவதற்கு இயலும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நியூஸ்லைன் நிகழ்ச்சியில் பங்கேற்ற தேர்தல்கள் ஆணையாளரிடம் பழைய முறைமைக்கே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என அரசாங்கத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறித்து கேட்கப்பட்டபோது,
பாராளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்களைப் பார்க்கும்போது, அரசாங்கத்திலுள்ள ஒருசாரார் பழைமை முறைமையில் தேர்தலை நடத்துமாறு கோருகின்றதாகவும் அரசாங்கத்திலுள்ள மற்றுமொரு பிரிவினர் புதிய முறையின் கீழ் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். எது எவ்வாறாயினும், பாராளுமன்றத்திலேயே இது குறித்த இறுதித் தீர்மானம் எட்டப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். பிரதமர் நாடு திரும்பியவுடன், இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் இம்மாத இறுதிக்குள் தீர்மானமொன்றை எடுப்பார்களாயின், எதிர்வரும் அக்டோபர் மாதமளவில் சட்டமூலம் தொடர்பான நடவடிக்கைகளை நிறைவு செய்ய முடியும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார். எவ்வாறாயினும், எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் 6 மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடாத்த முடியாது. வட மாகாண சபையின் பதவிக்காலம் அக்டோபர் மாதம் 25 ஆம் திகதியே நிறைவடைகின்றது எனக் கூறிய அவர், தேர்தலை நடத்துவது தொடர்பில் பாராளுமன்றமே இறுதித் தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.