கொழும்பில் இரு தினங்களில் மூவர் சுட்டுக்கொலை: இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை
by Bella Dalima 10-07-2018 | 9:37 PM
Colombo (News 1st) கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த இரு தினங்களில் மூவரை சுட்டுக் கொலை செய்தவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
துப்பாக்கிச்சூட்டில் பலியான நவோதயா மக்கள் முன்னணியின் தலைவர் கிருஷ்ணா என்று அழைக்கப்படுகின்ற கிருஷ்ணப்பிள்ளை கிருபானந்தனின் பூதவுடல் இன்று கட்சி தலைமையகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 7.45 மணியளவில் செட்டியார் தெரு ஆண்டிவால் சந்தியில் உள்ள கடையில் நவோதயா மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கிருஷ்ணா என்று அழைக்கப்படுகின்ற கிருஷ்ணப்பிள்ளை கிருபானந்தன் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது
கடைக்கு வந்த ஒருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட காட்சி அங்கிருந்த 4 CCTV கெமராக்களில் பதிவாகியிருந்தது.
கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் நவோதயா மக்கள் முன்னணி, சுயேட்சைக்குழுவாகப் போட்டியிட்டு 2 ஆசனங்களைத் தன்வசப்படுத்தியது.
இந்நிலையில், இந்த கொலை தொடர்பில் பல சந்தேகங்கள் எழுவதாக அந்த முன்னணியின் பொதுச்செயலாளர் சந்திரன் இளையதம்பி குறிப்பிட்டார்.
நவோதயா கிருஷ்ணாவின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.
இதேவேளை, ஜம்பட்டா வீதி, 131 ஆம் தோட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியான எலிசபத் பெரேரா மற்றும் அவரது கணவர் செல்லையா செல்வராஜ் ஆகியோரது பூதவுடல்கள் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.
இறுதிக்கிரியைகள் நாளை (11) நடைபெறவுள்ள நிலையில், இதுவரை சந்தேகநபர்கள் கைது செய்யப்படவில்லை.