இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

by Bella Dalima 10-07-2018 | 6:43 PM
Colombo (News 1st)  இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் விடுதலை உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போரட்டத்தை அறிவித்துள்ளனர். கடந்த  ஒரு வார காலத்தில் இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களது 3 விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  இராமேஸ்வரம் விசைப்படகு  மீனவர்கள் இன்று  இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் ஆலோசனைக்கூட்டமொன்றை நடத்தியதுடன், இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தீர்மானித்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது புதிய வெளிநாட்டு மீன்பிடித் தடைச்சட்டத்தை அமல்படுத்த இலங்கை அரசு முயற்சித்து வருகின்றமையை எதிர்த்தும், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக படகுகளுக்கு முழு நிவாரணம் வழங்கக் கோரியும் அவர்கள் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். சுமார் 850-க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 10,000 மீனவர்களும்  5,000 கடற்றொழிலாளர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் இராமேஸ்வரம் செய்தியாளர் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டின் கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் கடந்த 8 ஆம் திகதியும், 12 இந்திய மீனவர்கள் கடந்த 5 ஆம் திகதியும் கைது செய்யப்பட்டு 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் இழுவைப்படகு மீன்பிடி முறையை தடை செய்யும் சட்டமூலம் கடந்த வருடம் ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய, இலங்கை கடற்பரப்பில் இழுவைப்படகு மீன்பிடியில் ஈடுபட்டால் இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது தண்டப்பணம் செலுத்தப்படல் வேண்டும். இந்த சட்டத்தின் பிரகாரம், குறித்த 16 மீனவர்களுக்கும் எதிராக எதிர்வரும் 12 ஆம் திகதி முதற்தடவையாக வழக்குத்தாக்கல் செய்வதற்கு கடற்றொழில் திணைக்களம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.