துருக்கியில் ரயில் தடம் புரண்டதில் 10 பேர் பலி

துருக்கியில் ரயில் தடம் புரண்டதில் 10 பேர் பலி

by Chandrasekaram Chandravadani 09-07-2018 | 5:53 AM
துருக்கியின் வட மேல் பகுதியில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, 70க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பல்கேரிய எல்லையிலுள்ள கபிகுலே நகரிலிருந்து இஸ்தான்புல்லுக்குப் பயணித்த ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன. சுமார் 360 பயணிகளுடன் சென்ற குறித்த ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ரயில் தடம் புரண்டமைக்கான காரணம் தெரியவில்லை. ஆனால், சீரற்ற காலநிலை மற்றும் அதனால் ஏற்பட்ட மண்சரிவே இதற்குக் காரணம் என அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்களில் கூடுதலானோர் ஹெலிகொப்டரின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஆளுநர் மெஹ்மட் செலான் தெரிவித்துள்ளார். ரயில் தடம் புரண்டதில் காயமடைந்தவர்களுள் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளும் அடங்குவதாக ரஷ்ய செய்திகள் தெரிவித்துள்ளன. மேலும், சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக, அந்நாட்டு ஜனாதிபதி தயீப் எர்டோகன் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதாக அவரது அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.