இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்துக்கு தயார் !

இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்துக்கு தயார் !

by Staff Writer 09-07-2018 | 7:12 PM

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போரட்டத்தை அறிவித்துள்ளனர்.

கடந்த  ஒரு வார காலத்தில் இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த பதினாறு மீனவர்களை் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது மூன்று விசைபடகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து  இராமேஸ்வரம் விசைபடகு  மீனவர்கள் இன்று  இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் ஆலோசனைக்கூட்டமொன்றை நடத்தியதுடன் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியும், அண்மையில் கைது செய்யப்பட்ட  ராமேஸ்வரம் மீனவர்கள் மீது புதிய வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தை அமல்படுத்த இலங்கை அரசு முயற்சித்து வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக படகுகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும் மற்றும் டீசலின் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும் ஆகிய ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆகும் பட்சத்தில் ராமநாதபுரம் ,புதுக்கோட்டை,தூத்துக்குடி,தஞ்சை  வேதாரணயம் உள்ளிட்ட ஜந்துமாவட்ட மீனவர்கள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த வுள்ளதாக மீனவ அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால்  சுமார் 850 க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகள்; கரையில் நிறுத்தப்பட்டுள்ளதுடன் சுமார் 10 ஆயிரம் மீனவர்களும்  5 ஆயிரம் கடற்றொழிலாளர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக எமது இராமேஸ்வரம் செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 7 பேர் கடந்த பெப்ரவரி மாதம் 8 ஆம் தலைமன்னாரில் கைது செய்யப்படடனர். எனினும் பெப்ரவரி மாதம் ஆரம்ப பகுதி முதல் ஜூலை மாதம் ஆரம்ப பகுதி வரையான காலப்பகுதியில் இந்திய மீனவர்கள் இலங்கை எல்பை பகுதியில் மீன் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்காமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாட்டின் கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் ட்ரோலர் படகொன்றும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார். இதேவேளை கடந்த 5 ஆம் திகதி 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் இழுவைப்படகு மீன்பிடி முறையை தடை செய்யும் சட்டமூலம் கடந்த வருடம் ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய, இலங்கை கடற்பரப்பில் இழுவைப்படகு மீன்பிடியில் ஈடுபட்டால் இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது தண்டப்பணம் செலுத்தப்படல் வேண்டும்.