1,248 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

1,248 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

by Staff Writer 08-07-2018 | 11:37 AM
Colombo (News 1st) சுமார் 1,248 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் பொலிஸ் போதையொழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். களுபோவில மற்றும் பத்தரமுல்ல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டிற்குள் பொலிஸ் போதை ஒழிப்புப் பணியகம் இந்தளவு போதைப் பொருளை கைப்பற்றிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். நேற்று இரவு 8 மணியளவில் களுபோவில் ப்ரதிம்பாராம மாவத்தையில் பயணித்த ஜீப் வண்டி வாகனம் சோதனையிடப்பட்டுள்ளது. இதில் ஹெரோயின் அடங்கிய 30 பொதிகள் கைப்பற்றப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜீப் வாகனத்தில் பயணித்த 29 வயதான இளைஞனும், சாரதியுமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், பத்தரமுல்ல சுபூத்திபுரவிலுள்ள வீடொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது. குறித்த வீட்டிலிருந்து, ஹெரோயின் போதைப் பொருள் அடங்கிய 66 பொதிகள் கைப்பற்றப்பட்டன. இதில் 103 கிலோ 948 கிராம் ஹெரொய்ன் இருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.