குரோஷிய அணிக்கு கிட்டிய அதிர்ஷ்டம்

உலகக்கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக க்ரோஷியா அரையிறுதிப் போட்டிக்கு தகுதி

by Staff Writer 08-07-2018 | 10:53 PM
உலகக்கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக க்ரோஷியா அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளை முன்னின்று நடத்தும் ரஷ்யாவை அதிர்ச்சி தோல்வியடையச் செய்து க்ரோஷியா இந்த வாய்ப்பினை உறுதிப்படுத்தியது. ஷ்யாவில் நடைபெறும் உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சோச்சி மைதானத்தில் நடைபெற்ற தொடருக்கான நான்காவது காலிறுதிப்போட்டியில் க்ரோஷியா போட்டிகளை முன்னின்று நடத்தும் ரஷ்யாவை சந்தித்தது. இந்தப்போட்டியை கண்டுகளிக்க 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்தில் குழுமியிருந்தனர். போட்டியின் 31 ஆவது நிமிடத்தில் டெனிஸ் ஷெரிசேவ் ரஷ்ய அணிக்கு முதல் கோலை ஈட்டிக் கொடுத்தார். அடுத்த எட்டாவது நிமிடத்தில் க்ரோஷியா முதல் கோலை அடைந்ததோடு , அன்ட்ரீச் க்ரமிரீக் (Andrej KRAMARIC) அந்த கோலை போட்டார். இதன்படி போட்டியின் முதல் பாதி 01 க்கு 01 என்ற கோல் கணக்கில் சமநிலையடைந்தது. இரண்டாம் பாதியில் இரு அணி வீரர்களும் தலா 2 கோல்களை போட்டதனால் , வெற்றியை தீர்மானிக்க பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. ரசிகர்களின் கரகோஷங்களுக்கும் எதிர்ப்பார்ப்புக்கும் பாத்திரமாய் அமைந்த ரஷ்ய வீரர்களால் 3 கோல்களுக்கு மேல் போட முடியாமல் போனது. எனினும் திறமையை வெளிப்படுத்திய க்ரோஷிய வீரர்கள் அபாரமாக 4 கோல்களை போட்டு வெற்றியை தமதாக்கினர். போட்டியில் 4 க்கு 3 என்ற பெனால்டி கணக்கில் வெற்றியீட்டிய க்ரோஷியா வரலாற்றில் முதல் தடவையாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றது. போட்டியில் தோல்வியடைந்த ரஷ்யாவுக்கு தொடரிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தப் போட்டியின் முடிவுடன் நான்கு அணிகள் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின் அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதிசெய்துள்ளன. உருகுவே அணிக்கு எதிரான போட்டியில் 2 க்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய பிரான்ஸூம் முன்னாள் சம்பியனான பிரேசில் அணியை 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பெல்ஜியம் அணியும் அரையிறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளன. சுவீடனுக்கு எதிரான போட்டியில் 2 க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய இங்கிலாந்து 28 வருடங்களுக்கு பிறகு அரையிறுதிப்போட்டிக்கு தெரிவானது. ரஷ்யாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் 4 க்கு 03 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய க்ரோஷியா நான்காவது அணியாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. நாளை மறுதினம் நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. க்ரோஷிய மற்றும் இங்கிலாந்து அணிகள் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் மோதவுள்ளதுடன் அந்தப்போட்டி எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.