மீட்கப்பட்ட கையடக்கத் தொலைபேசி குறித்து விசாரணை

அர்ஜூன் அலோசியஸிடமிருந்து மீட்கப்பட்ட கையடக்கத் தொலைபேசித் தொடர்பாடலைப் பெற நடவடிக்கை

by Staff Writer 08-07-2018 | 7:01 AM
Colombo (News 1st) பேர்பெச்சுவல் ட்ரசஷரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளில் இடம்பெற்ற தொடர்பாடலைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தரவுகளை வழங்குமாறு குறித்த நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறையிலிருந்து அண்மையில் 3 கையடக்கத் தொலைபேசிகளும் 5 சிம் அட்டைகளும் கண்டெடுக்கப்பட்டதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜனரல் யசந்த கோதாகொட கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்தார். அவற்றில், ஒரு கையடக்கத் தொலைபேசி அர்ஜூன் அலோசியஸின் தலையணைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் மன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து, சிறைச்சாலையின் புலனாய்வுப்பிரிவு அதிகாரி மற்றும் மெகசின் சிறைச்சாலை அத்தியட்சகரின் தலைமையில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விசாரணை அறிக்கைகளின் அடிப்படையிலேயே, அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேனவை வெவ்வேறு சிறைக்கூடங்களுக்கு மாற்றுவதா அல்லது வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய குறிப்பிட்டுள்ளார்.