Taisei நிறுவன தாமதக்கட்டணம் தொடர்பில் ஆராய்வோம்

Taisei நிறுவனம் கோரும் தாமதக்கட்டணம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து தீர்மானிப்போம்: கபீர் ஹாசிம்

by Bella Dalima 07-07-2018 | 7:27 PM
Colombo (News 1st)  கொழும்பு வௌியேறும் சுற்றுவட்ட வீதியில் ஜப்பானின் Taisei நிறுவனம் முன்னெடுக்கும் நிர்மாண ஒப்பந்தத்திற்கு அரசாங்கத்திடம் தாமதக்கட்டணத்தை கோரியுள்ளதாக துறைசார் அமைச்சர் கபீர் ஹாசிம் இன்று முதன்முறையாக தெரிவித்தார். கடுவலை மற்றும் கடவத்தை ஆகிய நகரங்களுக்கிடையில் நிர்மாணிக்கப்படும் அதிவேக வீதியின் நிர்மாணத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கான கொடுப்பனவே கோரப்பட்டுள்ளது. ஒப்பந்த செயற்பாடுகளை மீறி மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாண ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட ஜப்பானின் Taisei நிறுவனம், கொழும்பு வௌிச்சுற்றுவட்ட வீதியின் நிர்மாணத்திற்கு அரசாங்கத்திடம் 4 பில்லியன் ரூபாவிற்கும் அதிக தாமதக் கட்டணத்தை கோரியுள்ளதாக கடந்த 2 ஆம் திகதி நியூஸ்ஃபெஸ்ட் செய்தி வௌியிட்டது. இந்த விடயத்தை பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் இன்று உறுதிப்படுத்தினார். அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்ததாவது,
Taisei கோரிக்கை விடுத்துள்ளது. ராஜபக்ஸக்களின் காலத்தில் தெற்கு அதிவேக வீதியின் மதிப்பீடு தவறு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பாரிய செலவு ஏற்படப்போகின்றது. நாங்கள் அதற்கு உடன்படவில்லை. அமைச்சு என்ற வகையில், ஜப்பான் தூதுவர் என்னை சந்தித்து இது தொடர்பில் கோரிக்கை விடுத்தார். விதிமுறை உள்ளதாக நான் கூறினேன். அந்த நிறுவனத்திற்கு கோரிக்கை விடுக்க முடியும் எனினும் ஆணைக்குழுவினை நியமித்து அதனூடாக ஆராய்ந்து பார்த்து தான் தீர்மானிப்போம்.
அமைச்சர் குறிப்பிடும் இந்த தாமதக் கட்டணத்தை தாம் நிதியமைச்சராக பதவி வகித்த காலத்தில் நிராகரித்ததாக கடந்த 3 ஆம் திகதி முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.