யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் ஒலி மாசு

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் ஒலி மாசு

by Staff Writer 07-07-2018 | 8:10 PM
Colombo (News 1st)  யாழ்ப்பாணத்தில் ஒலி மாசு அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஒலிபெருக்கிகளால் அசௌகரியம் ஏற்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டினர். பொது இடங்கள், மதஸ்தலங்கள், சந்தைகளில் பொருத்தப்படும் ஒலிபெருக்கிகளால் ஒலி மாசடைவது மாத்திரமன்றி மாணவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் உள்ளிட்டோர் அதிகளவில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். ஒலிபெருக்கி பாவனையை கட்டுப்படுத்துமாறு யாழ். மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மா.இளஞ்செழியன் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தார். எனினும், அந்த உத்தரவை மீறி ஒலிபெருக்கிகளின் ஊடாக அதிக ஒலி எழுப்பப்படுகின்றது. இதேவேளை, கடந்த மார்ச் மாதம் வட மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண பொலிஸ் அதிகாரிகள் இடையிலான சந்திப்பின் போது, இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸார் கூறியதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் குறிப்பிட்டார். குற்றவியல் கோவை 98 ஆவது பிரிவின் கீழ் பொலிஸார் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததாக அவர் கூறினார்.