குகைக்குள் சிக்கிய சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சி

தாய்லாந்து குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சி

by Chandrasekaram Chandravadani 07-07-2018 | 7:41 AM
தாய்லாந்தில் குகைக்குள் சிக்குண்டுள்ள சிறுவர்களுக்கு சுழியோடிகள், நீச்சல் பயிற்சிகள் மற்றும் மூச்சுப் பயிற்சிகளை வழங்குகின்றதாக சியாங் ராய் பிராந்திய ஆளுநர் நரோங்சாக் ஒசொத்தனாகோர்ன் தெரிவித்துள்ளார். அதேநேரம், சிறுவர்களின் உடல்நிலை தற்போது தேறிவருவதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். குகைக்குள் சிக்கியுள்ள தமது பிள்ளைகளுக்கு அவர்களது பெற்றோர் கடந்த வியாழக்கிழமை கடிதங்களை அனுப்பியுள்ளனர். ஆனால், கடிதங்கள் அவர்களை சென்றடைந்திருக்குமா என்பதைத் தனக்குக் கூறமுடியாதுள்ளதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார். மீட்புப் பணியின் நிமித்தம் குகைக்குள் செல்வதற்கு எதிர்பார்த்து, மீட்புப் பணியாளர்கள் நூற்றுக்கும் அதிகமான குழிகளைத் தோண்டியுள்ளனர். தாய்லாந்தின் தாம் லுயாங் குகைக்குள் கடந்த 2 வார காலமாக சிக்கியுள்ள 12 சிறுவர்களும் அவர்களது பயிற்றுவிப்பாளரும் உயிருடன் இருப்பதாக 9 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம், குகைக்குள் வாயுத் தாங்கியைக் கொண்டுசெல்ல முற்பட்டபோது, தாய்லாந்தின் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தமை நினைவுகூரத்தக்கது.