தபால்மா அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு

தபால்மா அதிபரின் இடமாற்றத்திற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

by Staff Writer 07-07-2018 | 6:53 AM
Colombo (News 1st) தபால்மா அதிபர் ரோஹன அபேரத்னவுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றம் தொடர்பில் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. உடன் அமுலுக்குவரும் வகையில் தபால்மா அதிபர், ஜனாதிபதி செயலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். தபால்மா அதிபரின் இந்த இடமாற்றம் காரணமாக தபால் திணைக்களத்தில் காணப்படும் பிரச்சினைகள் மேலும் வலுப்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார். பணிப்பகிஷ்கரிப்பு நிறைவடைந்து தமது கோரிக்கைகள் தொடர்பில் தீர்வு எட்டப்படும் நிலையிலேயே, தபால்மா அதிபரின் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக சிந்தக பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தபால் அமைச்சர் அப்துல் ஹலீமிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது,
தபால்மா அதிபரை ஜனாதிபதி செயலகத்திற்கு இடமாற்றுமாறு கடந்த 2, 3 மாதங்களாக தன்னிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் முதலில் தான் அதற்கு மறுப்புத் தெரிவித்ததாகவும் கூறிய அமைச்சர், தபால் திணைக்களத்தில் காணப்படும் பிரச்சினைகளை நிவர்த்திசெய்யும் வரை, தபால்மா அதிபருக்கு இடமாற்றம் வழங்க முடியாது என நான் ஜனாதிபதிக்கும் ஜனாதிபதி செயலாளருக்கும் அறிவித்ததாகக்  குறிப்பிட்டார். இதனையடுத்து, இடமாற்றம் வழங்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டபோதிலும், இம்முறை அமைச்சரவையின் அனுமதியுடனே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தபால்மா அதிபருக்கு இடமாற்றத்தை வழங்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் தொடர்ந்தும் கூற இயலாது
எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.