கவலைப்பட வேண்டாம் - குகைக்குள் சிக்கிய சிறுவர்கள்

'கவலைப்பட வேண்டாம்' - குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்கள் பெற்றோருக்குக் கடிதம்

by Chandrasekaram Chandravadani 07-07-2018 | 10:04 AM
தாய்லாந்திலுள்ள தாம் லுயாங் குகைக்குள் சிக்கியுள்ள மாணவர்கள், 'கவலைப்பட வேண்டாம்' எனவும் 'தாம் அனைவரும் உறுதியுடன் இருப்பதாகவும்' தமது பெற்றோருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர். அதேநேரம், வித்தியாசமான வகை உணவுகள் வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இந்தநிலையில், பெற்றோரிடம் தான் மன்னிப்பு கோருவதாக மாணவர்களின் பயிற்றுவிப்பாளர் எக்கபோல் சன்டவோங் பிறிதான கடிதம் ஒன்றில் எழுதியுள்ளார். தனது கடிதத்தில் பெற்றோருக்குத் தைரியமூட்டிய எக்கபோல் சன்டவோங், மீட்புப் படையினர் நல்லமுறையில் கவனித்துக் கொள்வதால் தற்போது அனைவரும் பாதுகாப்பாக உள்ளார்கள் என அனைத்துச் சிறுவர்களின் பெற்றோருக்கும் தெரிவித்துள்ளார். குகைக்குள்ளிருந்து தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததன் பின்னர், தமது குடும்பத்தினருடன் முதலாவதாக இந்தக் கடிதங்களின் மூலம் தொடர்புகொண்டுள்ளனர். கடந்த மாதம் 23ஆம் திகதி குறித்த குகைக்குள் சென்ற மாணவர்கள் 12 பேரும் அவர்களது கால்பந்து பயிற்றுவிப்பாளரும் குகைக்குள் சிக்கிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.