பிரான்ஸூம் பெல்ஜியமும் அரையிறுதிக்குத் தகுதி

உலகக்கிண்ண கால்பந்தாட்டம்: பிரான்ஸூம் பெல்ஜியமும் அரையிறுதிக்குத் தகுதி

by Bella Dalima 07-07-2018 | 7:48 PM
உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் முன்னாள் சாம்பியனான உருகுவே அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி 12 வருடங்களின் பின்னர் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதேவேளை, ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புகளுக்கு பாத்திரமாய் அமைந்த முன்னாள் சாம்பியனான பிரேசில் அணி தொடரிலிருந்து வெளியேறியது. பிரேசில் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியீட்டிய பெல்ஜியம் அணி இரண்டாவது அணியாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கஸான் அரினா மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முன்னாள் சாம்பியனான பிரேசில் அணி பெல்ஜியம் அணியுடன் மோதியது. போட்டியின் ஆரம்பம் முதலே பிரேசில் அணிக்கு நிகரான திறமையை பெல்ஜியம் வீரர்கள் வெளிப்படுத்தினர். அதன்படி, 40 ஆவது நிமிடத்தில் Fernandinho பெல்ஜியம் அணிக்கு முதல் கோலை ஈட்டிக்கொடுத்தார். 31 ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் இரண்டாவது கோலை Kevin De Bruyne போட்டார். முதல் பாதியில் பிரேசில் அணி வீரர்களால் கோலடிக்க முடியாமற்போனது. இரண்டாம் பாதி ஆட்டம் விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லாமல் நடைபெற்றதோடு, இரு அணி வீரர்களும் கோலடிக்க கடுமையாகப் போராடினார்கள். என்றாலும், 76 ஆவது நிமிடத்தில் Renato Augusto பிரேசில் சார்பாக முதல் கோலை போட்டார். நட்சத்திர வீரரான Neymar da Silva-வினால் தனது அணிக்காக எந்தவொரு கோலையும் ஈட்டிக்கொடுக்க முடியாமற்போனது. போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய பெல்ஜியம் அணி 1986 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. உலகக்கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் பெல்ஜியம் அணி அரையிறுதிப் போட்டிக்கு தெரிவான இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாக பதிவானது.