விஜயகலாவின் கூற்று தண்டனைக்குரிய குற்றம்

விஜயகலா மகேஸ்வரனின் கூற்று தண்டனைக்குரிய குற்றம்: நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு

by Staff Writer 06-07-2018 | 7:57 PM
Colombo (News 1st)  விஜயகலா மகேஸ்வரனின் கூற்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனை சட்டக்கோவையின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்பது தெரியவருவதாக, திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் பிரிவு கொழும்பு பிரதம நீதவான் ரங்க திசாநாயக்கவிடம் இன்று அறிக்கை சமர்ப்பித்தது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள செயற்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை தண்டனை சட்டக்கோவையின் 115 மற்றும் 120 ஆகிய சரத்துக்களின் கீழ், விஜயகலா மகேஸ்வரனின் கூற்று பயங்கரவாத தடை திருத்தச்சட்டத்தின் கீழ் வருவதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்தக் கூற்றை யாழ். நீதிமன்ற அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் தெரிவித்துள்ளதால், இது தொடர்பாக விசாரணை நடத்தி, குறித்த பகுதியிலுள்ள உரிய நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாகவும் திட்டமிட்ட வகையில் இடம்பெறும் குற்றங்களை தடுக்கும் பிரிவு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் திகதி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய தொகுக்கப்பட்ட மற்றும் தொகுக்கப்படாத காணொளிகள், காட்சிப்படுத்தப்பட்ட காணொளிகள் மற்றும் பிரசுரிக்கப்பட்ட செய்தி, பத்திரிகை, கட்டுரைகள் அனைத்தையும் திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவுக்கு வழங்குமாறு பிரதம நீதவான் அனைத்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். விஜயகலா மகேஸ்வரன் வௌியிட்ட கருத்துக்கள் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி, சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் நாகல்கந்தே சுகந்த தேரர் மற்றும் அந்த அமைப்பின் தலைவர் லியனகே அபேரத்ன ஆகியோர் கடந்த 3 ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.