தமிழ் சினிமாவை பார்த்து படம் எடுக்காதீர்கள்: நாசர்

தமிழ் சினிமாவை பார்த்து படம் எடுக்காதீர்கள்: நாசர்

by Bella Dalima 06-07-2018 | 6:47 PM
தினேஷ் குமார், சங்கீதா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வெடிகுண்டு பசங்க’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நாசர், தமிழ் சினிமாவை பார்த்து படம் எடுக்காதீர்கள் என்று கூறியுள்ளார். முழுக்க முழுக்க மலேசியாவில் நடப்பது மாதிரியான கதைப் பின்னணியைக் கொண்ட 'வெடிகுண்டு பசங்க' படத்தை பெண் இயக்குநரான Dr.விமலா பெருமாள் இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகனாக தினேஷ் குமாரும் நாயகியாக சங்கீதா கிருஷ்ணசாமியும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், நடிகர்கள் நாசர், சதீஷ், பிருத்விராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் நடிகர் நாசர் கூறியதாவது,
வெடிகுண்டு பசங்க’ படத்தின் வரவு அவசியமான ஒன்று. மலேசிய வாழ் தமிழர்கள் எப்போதுமே, தமிழ் திரையுலகினருக்கு பெரும் பலமாகவும், முதுகெலும்பாகவும் விளங்குபவர்கள். இசை, ஓவியம், நாட்டியம் என எத்தனை கலைகள் இருந்தாலும் சினிமாவுடன் நெருங்கிய உறவு வைத்திருக்கிறார்கள். சினிமா தான் மலேசிய தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் தொப்புள்கொடியாக இருக்கிறது. அங்கிருந்து இது போல இன்னும் நிறைய திரைப்படங்கள் இங்கு வர வேண்டும். முக்கியமாக அவையாவும் தனித்தன்மை வாய்ந்ததாகவும் அங்கிருக்கும் வாழ்வியலை பிரதிபலிப்பவையாகவும் இருக்க வேண்டும். இங்கிருக்கிற கலாசாரம், வாழ்வியல் சார்ந்து உருவாகிற தமிழ் சினிமாக்களைப் பார்த்து தயவுசெய்து படம் செய்யாதீர்கள். உங்களுடைய கலாசாரம், வாழ்வியல் சார்ந்த படங்களை உருவாக்குங்கள். அதைப் பார்க்க நாங்கள் ஆசைப்படுகிறோம்.