எனக்கு இச்சம்பவம் நேர்ந்திருந்தால் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருப்பேன்: மங்கள
by Bella Dalima 06-07-2018 | 9:37 PM
Colombo (News 1st) நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் அறிக்கை தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றுமொரு தகவலை இன்று வௌிக்கொணர்ந்தார்.
பசில் ராஜபக்ஸவின் மனைவி புஷ்பா ராஜபக்ஸவின் கணக்கில் 1 கோடியே 94 இலட்சம் ரூபா பணம் Hong Kong and Shanghai Banking Corporation Limited-இல் 21.052012 இல் வைப்பிலிடப்பட்டுள்ளமையை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வௌியிட்டுள்ளதாகவும் ரஞ்சன் ராமநாயக்க சுட்டிக்காட்டினார்.
மஹிந்த ராஜபக்ஸவின் 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விவகாரம் வௌிவந்துள்ள நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில், எல்லே குணவங்ச தேரர் பெற்றுக்கொண்ட 38,000 டொலர்களும் இலஞ்சமாகவே குறிப்பிடப்பட்டுள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
மேலும், அதிகப் புள்ளிகளைப் பெற்ற சட்டத்தரணி நாமல் ராஜபக்ஸவிடமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடமும் இதற்கான பதிலை நேரடியாக வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் சிலரை அழைத்து, சீன தூதரக அதிகாரிகள் மற்றும் CHINA HARBOUR நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேற்று (05) விடயங்களைத் தௌிவுபடுத்தியுள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்கிய குற்றச்சாட்டை நிராகரிப்பதாக CHINA HARBOUR ENGINEERING நிறுவனம் இங்கு தெரிவித்ததாக BBC சிங்கள செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு இலங்கை பொலிஸார் விசாரணையொன்றை மேற்கொண்டமையை நிறுவனத்தின் பிரதிநிதி இதன்போது உறுதிப்படுத்தியதுடன், அந்த விசாரணைகளுக்கு தமது நிறுவனம் பூரண ஒத்துழைப்பு வழங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, நியூயார்க் டைம்ஸ் அறிக்கை தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் உள்ள குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தலுக்கு முன்னர் பில்லியன் டொலர் நிதியை பெற்றுக்கொண்டதாக அதில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அத்துடன், தேரர் ஒருவருக்கும் 38,000 டொலர்கள் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது அந்த தேரர் அக்கூற்றை உறுதிப்படுத்தியுள்ளார். தாம் அறியாத சீனர் ஒருவர் பணம் வழங்கிச்சென்றதாக தேரர் கூறியுள்ளார்.நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கூறிய இரண்டு விடயங்களில் ஒன்றை தேரர் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார். மறுபக்கம் அதனை பொய் என சிந்திப்பது கடினமாகும். எனக்கு இவ்வாறானதொரு சம்பவம் நேர்ந்திருந்தால், நான் பணம் தொடர்பில் சிந்திக்காமல் எனது நற்பெயரை பாதுகாப்பதற்காக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருப்பேன். அந்த பத்திரிகை எழுதிய தகவல்களை இலங்கையில் பிரசுரித்த பத்திரிகைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வோம் என ஜி.எல். பிரீஸ் கூறுகின்றார். இது நகைச்சுவையான விடயமாகும்.