கைதி ஒப்படைப்பு சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரிக்கை

உதயங்கவை அழைத்து வர கைதியை அயல்நாட்டிடம் ஒப்படைப்பதற்கான சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரிக்கை

by Staff Writer 06-07-2018 | 3:54 PM
Colombo (News 1st)  இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை நாட்டிற்கு அழைத்து வர, கைதியை அயல்நாட்டிடம் ஒப்படைப்பதற்கான சட்டத்தை அமுல்படுத்துமாறு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இதுவரை தமது கோரிக்கைக்கு பதிலேதும் கிடைக்கவில்லை என விசாரணைகளை முன்னெடுக்கும் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் பதிலுக்கு ஏற்ற வகையிலேயே எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. உதயங்க வீரதுங்க, தமது விருப்பத்தின் பேரில் நாட்டிற்கு வருகை தருவாராயின் குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதயங்க வீரதுங்க விருப்பத்தின் பேரிலோ அல்லது கைதியை அயல்நாட்டிடம் ஒப்படைப்பதற்கான சட்டத்தின் கீழ் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டாலோ கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் பிடியாணையின் பிரகாரம் அவர் கைது செய்யப்படுவார். ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க நாட்டிற்கு வருகை தருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா கடந்த வெள்ளிக்கிழழை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். உதயங்க வீரதுங்க துபாயில் கைது செய்யப்பட்டு அத்மாத் பிராந்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் மன்றில் சுட்டிக்காட்டியிருந்தது.