சுதாகரனின் விடுதலை தொடர்பில் சட்ட நடவடிக்கை

ஆனந்த சுதாகரனின் விடுதலை கோரிக்கை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவிப்பு

by Staff Writer 06-07-2018 | 7:08 PM
Colombo (News 1st) அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலை குறித்து முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி பொதுமக்களின் சுமார் 3 இலட்சம் கையொப்பங்களுடனான ஆவணம் அண்மையில் வட மாகாணக் கல்வி அமைச்சரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் லக்ஷ்மி ஜயவிக்ரமவின் கையொப்பத்துடன் வட மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரனுக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. ஆனந்த சுதாகரனை விடுவிக்குமாறு கோரி பல கோரிக்கைகள் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுவிப்பது தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி அலுவலத்தில் வௌியிடப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, வட மாகாணம் முழுவதும் ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி பெறப்பட்ட சுமார் 3 இலட்சம் கையெழுத்துகள் அடங்கிய மகஜர் வட மாகாண கல்வி அமைச்சரினால் கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதியிடம் நேரடியாகக் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கைதி ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளின் நலன் கருதி அவரை பிள்ளைகள் வாழும் பிரதேசத்திற்கு அண்மையில் உள்ள சிறைச்சாலைக்கு மாற்றுமாறு ஜனாதிபதியிடம் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.