தலையணைக்குள் கையடக்கத் தொலைபேசி: விசேட சோதனை

அர்ஜூன் அலோசியஸின் தலையணைக்குள் கையடக்கத் தொலைபேசி: விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பம்

by Bella Dalima 06-07-2018 | 3:33 PM
Colombo (News 1st)  அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை விடுதியில் இருந்து கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள H விடுதியிலிருந்து மூன்று கையடக்கத் தொலைபேசிகளும் 5 சிம் அட்டைகளும் கண்டெடுக்கப்பட்டதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (05) அறிவித்தார். இதில் ஒரு கையடக்கத் தொலைபேசி, அர்ஜூன் அலோசியஸின் தலையணைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சிறைச்சாலைகள் புலனாய்வுப் பிரிவு குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். இதனைத் தவிர, மெகசின் சிறைச்சாலை அத்தியட்சகரின் தலைமையிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கைப்பற்றப்பட்ட தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்ட விதம் மற்றும் கையடக்க தொலைபேசிகள், சிறைச்சாலைக்கு எவ்வாறு கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார். விசாரணை அறிக்கைகளின் பிரகாரம், அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோரை, வேறு பிரிவிற்கு மாற்றுவதா அல்லது வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோர் இம்மாதம் 19 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.