போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள்

வடக்கு - கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கும் திட்டத்தைத் துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

by Staff Writer 05-07-2018 | 9:53 PM
Colombo (News 1st) வடக்கு - கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இவர்களுக்கு செங்கல் மற்றும் சீமெந்திலான நிரந்தர வீடுகளை வழங்கும் திட்டத்திற்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை இணக்கப்பாட்டுக் குழு மற்றும் திட்டமிடல் குழுவின் பரிந்துரைக்கு அமைய வீடொன்று தலா 1.25 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. முதற்கட்டமாக 15,000 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டு 8 மாதங்களில் பணிகளை பூர்த்தி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை 2019 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்வதற்காகவும் இந்த நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளவுள்ள நிறுவனத்துடன் உடன்படிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்திருந்தார். இதேவேளை, வடக்கு கிழக்கில் வீடுகளை அமைப்பதற்கு சீனாவின் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் வழங்க அமைச்சரவையின் முதற்கட்ட அனுமதி கிடைத்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்திருந்தது. உள்நாட்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து சய்னா ரயில்வே பெய்ஜிங் கம்பனி வடக்கு கிழக்கில் 40,000 வீடுகளை அமைக்கவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் கடந்த வாரம் நியூஸ்ஃபெஸ்ட்டுக்குத் தெரிவித்தார். இதேவேளை, அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டங்கள் மூலம் நிர்மாணிக்கப்படும் வீடுகள் உரிய பயனாளிகளை சென்றடைகின்றதா என்ற கேள்வி எழுகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச மற்றும் இந்திய வீடமைப்புத் திட்டத்தில் வழங்கப்பட்ட 775 வீடுகள் பயனற்றுக் காணப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் நேற்று முன்தினம் நியூஸ்ஃபெஸ்டுக்குத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் நிரந்தர வீடுகளற்ற 11,700 குடும்பங்கள் வாழ்வதாக மாவட்ட செயலகம் கூறுகின்றது. இதேவேளை,1,60,000க்கும் மேற்பட்ட வீடுகள் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவைப்படுவதாக மீள் குடியேற்ற அமைச்சு தெரிவித்தது.