பேர்பெச்சுவல்: 1134 மில்லியன் காசோலைகள் விநியோகம்

பேர்பெச்சுவல்: W.M. மென்டிஸ் நிறுவனத்திலிருந்து 1,134 மில்லியன் பெறுமதியான காசோலைகள் விநியோகம்

by Staff Writer 05-07-2018 | 3:42 PM
(JUST IN) முறிகள் மோசடி குற்றச்சாட்டினை எதிர்நோக்கியுள்ள பேர்பெச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டபிள்யூ.எம். மென்டிஸ் நிறுவனத்திலிருந்து 2015 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதியிலிருந்து 2016 செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை 1,134 மில்லியன் ரூபா பெறுமதியான 2,487 காசோலைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இன்று நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது. இதில் ஒருசில காசோலைகள் நிதிச் சட்டத்தை மீறும் வகையில் விநியோகிக்கப்பட்டுள்ளதால், நிதித் தூய்தாக்கல் சட்டத்தின் பிரகாரம் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட குறிப்பிட்டுள்ளார். சர்ச்சைக்குரிய முறிகள் கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேர்பெச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோர் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன. அர்ஜூன் அலேசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.