தேசிய கணக்காய்வு சட்டமூலம் இன்று பாராளுமன்றில்

தேசிய கணக்காய்வு சட்டமூலம் இன்று பாராளுமன்றில்

by Staff Writer 05-07-2018 | 1:49 PM
Colombo (News 1st) தேசிய கணக்காய்வு சட்டமூலம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று நடைபெறுகின்றது. இந்த சட்டமூலம் மீதான விவாதம் பல சந்தர்ப்பங்களில் தாமதமான நிலையில், இன்று நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான கணக்காய்வு சட்டத்தை அரசாங்கத்தின் முதல் 100 நாட்களில் நிறைவேற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்தது. 2015 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்ட ஆணைக்குழுக்களில் தேசிய கணக்காய்வு ஆணைக்குழுவும் ஒன்றாகும். இந்த ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டம் நிறைவேற்றப்படாதமையால் அதன் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளன. சட்டமூலத்தை இன்று சபையில் சமர்ப்பித்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்றத்தின் நிதி அதிகாரங்களை கணக்காய்வு செய்யும் உரிமை பாராளுமன்றத்திற்கே உள்ளதென குறிப்பிட்டார். விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துந்னெத்தி, இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது வரையான பயணம் மிகவும் கடினமாக அமைந்ததென குறிப்பிட்டுள்ளார். குறித்த சட்டமூலம் பல்வேறு திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது உண்மையான கணக்காய்வு சட்டமூலமா என்பதில் சிக்கல் நிலவுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். இன்றைய விவாதத்தை பார்வையிடுவதற்காக கணக்காய்வாளர் நாயகம் மற்றும் கணக்காய்வு திணைக்களத்தின் அதிகாரிகளும் பாராளுமன்றத்திற்கு வருகைதந்துள்ளதாக அங்கிருக்கும் நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.