சிறுத்தை கொலையின் சந்தேகநபர்களுக்கு பிணை

கிளிநொச்சியில் சிறுத்தை கொலையின் சந்தேகநபர்களுக்கு பிணை

by Staff Writer 05-07-2018 | 6:36 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றைத் தாக்கிக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த 10 சந்தேகநபர்களுக்கும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது. சந்தேகநபர்கள் இன்று கிளிநொச்சி நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கின் 10 சந்தேகநபர்களையும் தலா 5,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 1 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்தோடு, மாதந்தோறும் இறுதித் திங்கட்கிழமைகளில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இவர்கள் கையொப்பமிட வேண்டும் எனவும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிளி. அம்பாள்குளம் கிராமத்திற்குள் கடந்த மாதம் 21 ஆம் திகதி அதிகாலை நுழைந்த சிறுத்தை தாக்கியதில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, சிறுத்தையை மடக்கிப் பிடித்த கிராம மக்கள், அதை அடித்துக் கொன்றனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, குறித்த 10 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்