ஐ. ஒன்றியத்தின் திட்டத்திற்கு மெக்ரோன் எச்சரிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்தின் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான திட்டம் குறித்து மெக்ரோன் எச்சரிக்கை

by Staff Writer 05-07-2018 | 1:40 PM
ஐரோப்பிய ஒன்றியத்தின் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான திட்டம் தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் எச்சரிக்கை விடுத்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான முகாம்களை வட ஆபிரிக்காவில் அமைப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டம் செயற்படுத்தப்பட மாட்டாது என அவர் கூறியுள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு முகாம்களை தமது நாடுகளில் அமைப்பதற்கு எந்தவொரு ஆபிரிக்க நாடும் இதுவரை அனுமதி வழங்கவில்லை எனவும் மெக்ரோன் மேலும் தெரிவித்துள்ளார். வட ஆபிரிக்க நாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தால் அவ்வாறு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாதெனவும் அவர் கூறியுள்ளார். ஆபிரிக்க நாடுகளில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான பாதுகாப்பான தடுப்புமுகாம்களை அமைப்பது தொடர்பில் இம்மாதம் கலந்துரையாடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்கனவே தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இமானுவேல் மெக்ரோனின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.