by Staff Writer 05-07-2018 | 1:27 PM
Colombo (News 1st) ஆவா குழு உறுப்பினர்களைக் கைது செய்வதற்காக 400 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பிரனாந்து தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் அண்மைக் காலமாக பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்வதற்காக இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா , மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 100 பொலிஸார் இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கமைய, எதிர்வரும் நாட்களில் வாகனங்களை சோதனையிடுவது உள்ளிட்ட பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரொஷான் பிரணாந்து மேலும் தெரிவித்துள்ளார்.
இதனை முன்னிட்டு, வட மாகாணத்தில் பணிபுரியும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறைகள் எதிர்வரும் 2 வாரங்களிற்கு இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.