மஹிந்த ராஜபக்ஸ சட்ட நடவடிக்கை எடுப்பாரா?

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஸ சட்ட நடவடிக்கை எடுப்பாரா?

by Bella Dalima 04-07-2018 | 9:49 PM
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ பொதுஜன பெரமுனவின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் இன்று கலந்து கொண்டார். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகள் சிலருக்கு அங்கத்துவத்தை வழங்குவதற்காக பத்தரமுல்ல - நெலும் மாவத்தையிலுள்ள கட்சி அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ஸவுடன் பசில் ராஜபக்ஸவும் கலந்து கொண்டிருந்தார். இதன்போது, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வௌியான செய்தி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஸ பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
தற்போது இலங்கையில் மாத்திரமல்ல வெளிநாடுகளிலும் சேறு பூசுவதற்கு முயற்சிக்கின்றார்கள். வெளிநாடுகளில் சேறு பூசினால் பரவாயில்லை. வழக்கு தாக்கல் செய்யவில்லையா என சிலர் கேட்கின்றனர். எனக்கு அமெரிக்காவில் வாக்குரிமை உள்ளதா என நான் கேட்டேன். நான் அமெரிக்காவில் வாக்கு கேட்கவா போகின்றேன்? ட்ரம்ப் போன்று நான் அதற்கு பதிலளிக்கப்போவதில்லை. இலங்கையில் அநாவசியமான முறையில் விடயங்கள் திரிபுபடுத்தப்பட்டமை தொடர்பில் சட்டத்தரணிகளுக்கு அறிவித்துள்ளோம். சட்ட நடவடிக்கை எடுப்பதற்காகவே, ஊடகங்களை ஒடுக்குவதற்காக அல்ல, திருத்துவதற்காக. இதனை பிரசுரிக்கும் அரச நிறுவனங்களும் இது குறித்து அறியவேண்டும். தனியார் நிறுவனங்கள் சேறு பூசினாலும் அது தொடர்பில் நான் கதைக்கப்போவதில்லை. எதை வேண்டுமானாலும் கூறட்டும். ஆனால், அரசாங்கத்தில் சம்பளம் பெறும், மக்களின் வரிப்பணத்தில் வாழும் அரச நிறுவனம் அநாவசியமாக சேறு பூச முடியாது.
இதன்போது, சிரச தொலைக்காட்சி தொடர்பிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஸ கருத்துத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
சிரசவிற்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்வீர்களா என என்னிடம் கேட்டார்கள். நான் இல்லையென்றேன். ஏன் என கேட்டார்கள். அதுவொரு தனியார் நிறுவனம் என கூறினேன். இறைவனின் அருளால் 3 வீதமானவர்களே பார்க்கின்றனர். ஆகவே எமக்கு பிரச்சினையில்லை.
 

தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள்!