கோட்டாபயவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தடை

கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இடைக்காலத் தடை

by Bella Dalima 04-07-2018 | 9:33 PM
Colombo (News 1st) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையொன்றை நடத்திச் செல்வதற்காக அவன்ற் கார்ட் மெரிடைம் சர்விசஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 1,140 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து தம்மை விடுவித்து விடுதலை செய்யுமாறு கோட்டாபய ராஜபக்ஸ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குறித்த மனு மீதான விசாரணை நிறைவுபெறும் வரை இடைக்கால தடை உத்தரவு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அச்சல வெண்கப்புலி மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் குறித்த மேன்முறையீடு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கோட்டாபய ராஜபக்ஸ ​மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு தொடர்பில் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் பிறப்பிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதில் சட்டச்சிக்கல் இருக்கின்றமை தெரியவருவதால் இந்த உத்தரவை பிறப்பிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவு தொடர்பில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு சட்ட மா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, தனிப்பட்ட காரணங்களினால் இந்த மனு மீதான விசாரணைகளில் இருந்து நீதிபதி ஜனக் டி சில்வா கடந்த ஜூன் முதலாம் திகதி விலகினார்.