சட்டப்பூர்வ கட்டமைப்பிற்குள் தேர்தலை நடத்தலாம்!

ஒன்றிணைந்த செயற்திட்டத்தின் மூலம் சட்டப்பூர்வ கட்டமைப்பிற்குள் கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை நடத்தலாம் என அறிவிப்பு

by Bella Dalima 04-07-2018 | 10:47 PM
Colombo (News 1st)  இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் தொடர்பான வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்படி, விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஒன்றிணைந்த செயற்திட்டத்தின் மூலம் சட்டப்பூர்வ கட்டமைப்பிற்குள் தேர்தல் நடத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உண்மைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இதனிடையே, விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்கள் நால்வரை சந்தித்தார். இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரான அர்ஜூன ரணதுங்க , சிதத் வெத்தமுனி, ஜயந்த தர்மதாச, ஆனா புஜ்ஜீஹேவா உள்ளிட்டோர் அந்த குழுவில் அங்கம் வகித்தனர். விஜய வலலசேகர மற்றும் ரிமென்சி விஜேதிலக்க உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்வதாக இருந்த போதிலும் அவர்கள் சமூகமளிக்கவில்லை. உபாலி தர்மதாச சுகயீனம் காரணமாக இந்த சந்திப்பில் பங்கேற்கவில்லை. சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை அணியின் முன்னாள் வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகர்களாக செயற்படுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்தார். ரொஷான் மஹாநாம , அரவிந்த டி சில்வா, முத்தையா முரளிதரன், மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார உள்ளிட்ட வீரர்களுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார். எனினும், இலங்கை கிரிக்கெட்டிற்குள் நிலவும் அரசியல் காரணமாக அந்த பொறுப்பை தாம் நிராகரிப்பதாக அவர்கள் அமைச்சருக்கு அறிவித்தனர். சுயாதீனமாக செயற்படுவதற்கான சூழல் தற்போது இலங்கை கிரிக்கெட்டில் இல்லை என அவர்கள் அமைச்சருக்கு அறிவித்தனர். சரிவிற்குள்ளாகியுள்ள இலங்கை கிரிக்கெட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்வதற்கே குறித்த நால்வரும் இன்று விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்துள்ளனர்.