கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த வவுனியா இளைஞர்

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த வவுனியா இளைஞர்

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த வவுனியா இளைஞர்

எழுத்தாளர் Bella Dalima

04 Jul, 2018 | 10:32 pm

Colombo (News 1st)  வவுனியாவைச் சேர்ந்த இளைஞரொருவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற இளைஞரின் சாதனைக்கான கின்னஸ் சான்றிதழ் நேற்று (03) கிடைக்கப்பெற்றுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் சிறுவயது முதல் தொழில்நுட்ப விடயங்களில் ஆர்வம் கொண்டிருந்தார்.

சாதனை ஏட்டில் இடம்பெறக் காத்திருந்த இவருக்கு அதற்கான களம் அமைந்திருக்கவில்லை.

தடைகளைத் தாண்டிய இவரின் உலக சாதனை முயற்சி கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி பரிசோதிக்கப்பட்டது.

கின்னஸ் சாதனை முயற்சியான இவரது கண்டுபிடிப்பு வவுனியா தமிழ் மத்திய கல்லூரி மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பான ஆவணங்கள் கின்னஸ் உலக சாதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, இவரின் முயற்சி அங்கீகரிக்கப்பட்டது.

உலக கின்னஸ் சாதனைக்கான இணையத்தளத்தில் இது தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் இவருக்கு நேற்று கிடைக்கப்பெற்றது.

தனது சாதனை தொடர்பில் கனகேஸ்வரன் கணேஸ்வரன் தெரிவித்ததாவது,

உலகத்தில் உள்ள பவர் ஸ்ட்ரிப்-களில் அதிக சொக்கட் அவுட்லெட்ஸ் உள்ள ஒரேயொரு பவர் ஸ்ட்ரிப் இதுதான். 42 சொக்கட்களிலும் 42 வகையான அப்லயன்ஸஸினை இணைக்கலாம். 13 அம்பியருக்கு மேற்படாதவாறு, சொக்கட்ஸூக்கு அப்லயன்ஸ் இணைக்கலாம். அதிலும் 3.2 கிலோ வாட் பெறுமானம் உள்ள அப்லயன்ஸ் வரைக்கும் இணைக்கலாம். 42 சொக்கட்ஸிலும் 42 ஃபோன்களை இணைக்கலாம்.

ஏவுகணை தொடர்பான ஆராய்ச்சிகளில் இவர் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்.

29 வயதான கணேஸ்வரன், க.பொ.த உயர்தரம் வரை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றார்.

பின்னர், மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியல் துறைக்குத் தெரிவான இவர், கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்தார்.

இலங்கை புத்தாக்க ஆணைக்குழுவினால் 2012 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட போட்டிகளில் 14 கண்டுபிடிப்புகளுடன் இவர் பங்குபற்றினார்.

அவற்றில் இரண்டிற்கு தங்கப்பதக்கங்களும் மற்றொன்றிற்கு இரண்டாம் இடமும் கிடைத்ததாக கணேஸ்வரன் குறிப்பிட்டார்.

என்னுடைய அப்பா விவசாயி. அம்மா ஆசிரியையாக இருந்தார். போர்ச்சூழல் காலகட்டத்தில் கொழும்பிற்கு செல்ல இயலாது. வேலை செய்யும்போது இருந்த வருமானம் இப்போது இல்லை. என்றாலும், திருப்தி அதிகமாக இருக்கிறது. காசை மட்டுமே நாங்கள் யோசித்தால் வாழ்க்கையில் எதையுமே சாதிக்க இயலாது. 7 வகையான ரொக்கெட்களை ஏவி முயற்சி செய்திருக்கிறேன். அவற்றில் இரண்டு வெற்றியளித்திருக்கின்றன. தற்போது இலங்கையில் முதலாவது ‘லிகியூட் பியூல் ரெக்கெட் எஞ்சின்’ என்ற வர்க்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

புதுவித முயற்சிகள் வெற்றியடைந்து, அவற்றால் நாட்டிற்கு நன்மைகிடைக்க வேண்டுமென்பதே கணேஸ்வரனின் எதிர்பார்ப்பு.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்