82 வீதம் காணி விடுவிக்கப்பட்டதாகக் கூறுவது தவறானது

வடக்கில் 82 வீதம் காணி விடுவிக்கப்பட்டதாகக் கூறும் கருத்து தவறானது: வட மாகாண முதலமைச்சர்

by Bella Dalima 03-07-2018 | 9:55 PM
Colombo (News 1st)  இராணுவ பிரசன்னம் உள்ளிட்ட காரணங்களால் விடுவிக்கப்பட்ட காணிகளிலும் மக்கள் குடியேற முடியாதுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜீர அபேவர்தன ஆகியோருடன் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (02) நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியதாக முதலமைச்சரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. வௌிவிவகார அமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைய மாவட்ட அரசாங்க அதிபர் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். விடுவிக்கப்பட்ட அனைத்துக் காணிகளிலும் மக்கள் குடியேறிவிட்டதாக அரசாங்க அதிபர் தெரிவித்த கருத்தினை முதலமைச்சர் நிராகரித்துள்ளார். வீட்டுத்திட்டம் கிடைக்காமை, காணிகளுக்கு அருகில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளமை மற்றும் விடுவித்த காணிகள் சிலவற்றிலிருந்து இராணுவம் வௌியேறாமை ஆகிய காரணங்களினால் மக்கள் குடியமர முடியாதுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 82 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டதாக இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தினையும் முதலமைச்சர் மறுத்ததாக முதலமைச்சரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 50 வீதமான காணிகள் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.