மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் கைது

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் கைது

by Bella Dalima 03-07-2018 | 5:32 PM
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் கைது செய்யப்பட்டுள்ளார். பிடியாணையை அடிப்படையாகக்கொண்டு நஜீப் ரஸாக் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் பிரதமர் நாளைய தினம் (04) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய அபிவிருத்தி நிதியத்திலிருந்த பல மில்லியன் டொலர்கள் காணாமற்போனமை தொடர்பிலேயே மலேசியாவின் முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 92 வயதான மஹதிர் மொஹம்மட் வரலாற்று வெற்றியை பதிவு செய்தார். ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட தனது அரசியல் மாணவரும் மலேசிய பிரதமருமான நஜீப் ரஸாக்கை எதிர்த்து, இம்முறை தேர்தலில் போட்டியிட தனது அரசியல் ஓய்வை விலக்கிக்கொண்டு மஹதிர் மொஹம்மட் தேர்தலில் களமிறங்கியமை குறிப்பிடத்தக்கது. மலேசியாவின் பிரதமராக தான் தெரிவு செய்யப்படும் பட்சத்தில், நஜீப் ரஸாக் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விரிவான விசாரணைகளை மீண்டும் முன்னெடுப்பதற்கும் அதேபோன்று, அவரை கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹதிர் மொஹம்மட் தேர்தல் வாக்குறுதியளித்திருந்தார். மலேசிய வரலாற்றில் புதியதொரு வெற்றியை பதிவு செய்த மஹதிர் மொஹம்மட்டினால் முன்னாள் பிரதமருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. நஜீப் ரஸாக் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. நஜீப்பின் அலுவலகம், தனியார் குடியிருப்பு மற்றும் தலைநகர் கோலாலம்பூரில் நஜீப்பிற்கு சொந்தமான பல இடங்களில் பல நாட்களாக ஊடகங்களின் முன்னிலையில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதன்போது, விலையுயர்ந்த கைப்பைகள் அடங்கிய 284 பெட்டிகள், தங்கம் மற்றும் கைக்கடிகாரங்கள் என்பன கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.