குகைக்குள் சிக்கியவர்கள் 9 நாட்களில் கண்டுபிடிப்பு

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய மாணவர்கள் குழு 9 நாட்களின் பின்னர் கண்டுபிடிப்பு

by Staff Writer 03-07-2018 | 8:58 AM
தாய்லாந்தில் குகைக்குள் சென்று காணாமல்போன 12 மாணவர்கள் மற்றும் அவர்களது பயிற்றுவிப்பாளர் 9 நாட்களின் பின்னர் கண்டிபிடிக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் வட மாநிலத்திலுள்ள தேசிய பூங்காவிலுள்ள குகையொன்றுக்குள் கடந்த 23 ஆம் திகதி சென்ற பயிற்றுவிப்பாளர் மற்றும் கால்பந்து வீரர்கள் 12 பேர் குகையில் சிக்கிக்கொண்டனர். கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குகையிலிருந்து வீரர்களால் மீளத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அதிகரித்த வௌ்ளம் மற்றும் சேறு காரணமாக தேடுதல் பணிகளும் தாமதமடைந்திருந்தன. இதனைத் தொடர்ந்து, அமெரிக்க வீரர்கள் மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த சுழியோடிகள் மீட்புப் பணிகளில் இணைந்திருந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்த நிலையில், பிரித்தானிய சுழியோடிகள் இருவர் மூலம் 13 பேரும் பாதுகாப்பாக உள்ளமை தெரியவந்துள்ளது. சியாங் ராய் பகுதியிலுள்ள தாம் லுவாங் குகையில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில், 13 பேரும் பாதுகாப்பாக உள்ளதை பிராந்திய ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, அவர்களை குகையிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 13 பேரையும் மீட்பதற்கு குகையிலுள்ள நீரை வற்ற வைக்க வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார். அத்துடன், வைத்தியர்கள் மற்றும் தாதியர்களை குகைக்குள் அனுப்பி, சிறுவர்களின் உடல் நலத்தை சோதனையிடுவதற்கும் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் நாட்களில் அப்பகுதியில் கடும் மழை பெய்யும் என்பதால், குகைக்குள் மேலும் நீர் நிரம்பும் அபாயமுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.