கண்டெடுக்கப்பட்ட Hair Band ரெஜினாவுடையது என தந்தை தெரிவிப்பு
by Bella Dalima 03-07-2018 | 8:19 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிஸ்கட் வழங்குவதாகக் கூறியே சிறுமியை சந்தேகநபர்கள் காட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சுழிபுரம் பகுதியில் 6 வயது சிறுமியான சிவனேஸ்வரன் ரெஜினா துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 22 வயதுடைய சிவகுமார் சதீஸ்குமார் எதிர்வரும் ஜூலை மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சம்பவம் தொடர்பில் சுழிபுரம் - காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதான இரண்டு இளைஞர்கள் கடந்த 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
சிறுமிக்கு பிஸ்கட் வழங்குவதாகக் கூறியே இவர்கள் சிறுமியை காட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
பிரதான சந்தேகநபர் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதுடன், மற்றைய இரண்டு சந்தேகநபர்களும் இந்தக் குற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சிறுமியின் கழுத்தை நெரிப்பதற்கு மற்றைய இரண்டு சந்தேகநபர்களும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
குறித்த மூவரும் சிறுமியின் நெருங்கிய உறவினர்கள் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
சுழிபுரம் - காட்டுப்புலம் பகுதியில் 6 வயதான சிவனேஸ்வரன் ரெஜினா கடந்த 25 ஆம் திகதி பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொல்லப்பட்டமை பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட பாழடைந்த கிணற்றுக்கு அருகிலிருந்து ஆடையும், Hair Band-உம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
இந்த ஆடை சிறுமி ஒருவருடையது என சந்தேகிக்கப்படுகின்ற போதிலும் அது மாணவி ரெஜினாவினுடையதா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
எவ்வாறாயினும், கண்டெடுக்கப்பட்ட Hair Band தனது மகளுடையது என ரெஜினாவின் தந்தை இன்று நியூஸ்ஃபெஸ்டிற்குத் தெரிவித்தார்.