மஹிந்தவிற்கு நியூயோர்க் டைம்ஸின் அறிவிப்பு

ஊடகவியலாளர்களுக்கு அழுத்தம் கொடுக்காது தமது ஆசிரியர் பீடத்தை தொடர்புகொள்ளுமாறு மஹிந்தவிற்கு நியூயோர்க் டைம்ஸ் அறிவிப்பு

by Bella Dalima 03-07-2018 | 9:26 PM
Colombo (News 1st)  நியூ​யோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வௌியிடப்பட்ட செய்தி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தரப்பு வௌியிட்டுள்ள கருத்திற்கு அந்த பத்திரிகை பதில் அறிக்கையொன்றை விடுத்துள்ளது. தமது அறிக்கையில் மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஏதேனும் சிக்கல்கள் காணப்படுமாயின், இலங்கை ஊடகவியலாளர்களை அச்சுறுத்தாது தமது ஆசிரியர் பீடத்தை தொடர்புகொள்ளுமாறு நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவணத்தை தயாரிக்கும்போது ஒத்துழைப்பு வழங்கியதாக இலங்கையின் ஊடகவியலாளர்கள் இருவர் பகிரங்கமாக விமர்சனத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் சர்வதேச செய்தியாசிரியர் Micheal Slackman விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதனை ஒருபோதும் ஏற்றுக்கொளள் முடியாது எனவும் விமர்சனங்களை மௌனிக்க செய்யவே இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஊடக சுதந்திரத்தை வரையறுக்க முடியாது எனவும் நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்றுள்ள விடயங்களை அந்நாட்டு மக்கள் அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் உள்ளதாகவும் அந்த முயற்சியை முடக்கும் செயற்பாட்டில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் சர்வசே செய்தி ஆசிரியர் தெரிவித்துள்ளார். ஆகவே, இலங்கை அதிகாரிகள் ஊடக நிறுவனங்களினதும் ஊடகவியலாளர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்கள் என்று நம்புவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமக்கும் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் ஊடகவியலாளர்களின் விமர்சனங்கள் தொடர்பில் செயற்படுவதற்கோ அல்லது தலையிடுவதற்கோ நேரம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்களுக்கு உரிமைகள் இருப்பதனைப் போன்று தமது விடயங்கள் தொடர்பில் தெரிவிக்கப்படும் பொய்யான தகவல்களுக்கு பதில் வழங்கும் உரிமை அரசியல்வாதிகளுக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதனை சரியாகக் கூறுமாறு நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் சர்வதேச செய்தி ஆசிரியருக்கு நாமல் ராஜபக்ஸ சவால் விடுத்துள்ளார்.