SLC தேர்தலை 6 மாதங்களுக்குள் நடத்த வேண்டும்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை 6 மாதங்களுக்குள் நடத்தாவிட்டால் சிக்கல்  உருவாகும்: ICC அறிவிப்பு

by Bella Dalima 03-07-2018 | 7:17 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை அடுத்த 6 மாதங்களுக்குள் நடத்தாவிட்டால் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இலங்கைக்கான உறுப்புரிமை தொடர்பில் சிக்கல் நிலை உருவாகும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. இதேவேளை, போட்டிகளின் போது பந்தை சேதப்படுத்தும் வீரர்களுக்கு எதிரான தண்டனையை அதிகரிப்பதற்கும் சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது. அயர்லாந்தின் டப்ளினில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 75 ஆவது பொதுக்குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை அடுத்த 6 மாதங்களில் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இணங்கியுள்ளதாகவும் குறித்த காலப்பகுதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக்குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நடைபெறாத சந்தர்ப்பத்தில், சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இலங்கையின் உறுப்புரிமை தொடர்பில் சிக்கல் நிலை உருவாகும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.