கிளிநொச்சியில் அதிநவீன ஸ்கேனருடன் நால்வர் கைது

கிளிநொச்சியில் அதிநவீன ஸ்கேனருடன் நால்வர் கைது

by Staff Writer 02-07-2018 | 8:17 PM
Colombo (News 1st) கிளிநொச்சி பகுதியில் நிலத்திற்கடியிலுள்ள பொருட்களைக் கண்டறியும் ஸ்கேனரை வைத்திருந்த சந்கேநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய நேற்று மாலை கிளிநொச்சி - சிவபுரம் பரந்தன் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது, அதிநவீன ஸ்கேனருடன் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி, பளை, மற்றும் கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்கேநபர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி - அறிவியல் நகர் பகுதியில் நிலத்திற்கடியில் உள்ள பொருட்களைக் கண்டறியும் வசதியுடைய ஸ்கேனருடன் சந்தேகநபர்கள் இருவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தங்கம் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்துடன் வட மாகாணத்தின் மன்னார் , முல்லைத்தீவு , வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கடந்த காலங்களில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும், குறித்த பகுதிகளில் இதுவரை தங்கம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மக்கள் இவ்வாறு குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த விடயம் தொடர்பில் இராணுவ ஊடகப் பேச்சாளரிடம் வினவியபோது,
2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பெற்றுக்கொண்ட தங்கங்களில் சில , கடந்த ஆட்சியில் உரியவர்களிடம் பிரித்து கொடுத்ததாகவும் எஞ்சியவை தொடர்பில் தமக்கு தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பெற்றுக்கொண்ட தங்கம் தொடர்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அறிந்து கொள்ளுமாறு இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து நியூஸ்ஃபெஸ்ட்டுக்குத் தெரிவித்துள்ளார்.