யாழில் போதை அதிகரிப்பு - சி.வி முறைப்பாடு!

வடக்கில் போதை அதிகரிப்பு - சி.வி ஜனாதிபதியிடம் முறைப்பாடு!

by Staff Writer 01-07-2018 | 5:33 PM

Colombo (News1st) வடக்கில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களையும் போதைப் பொருள் பாவனையையும் நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் யாழ் விஜயத்தையொட்டி முதலமைச்சர் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளதாக முதலமைச்சரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. வடக்கில் அதிகரித்துவரும் குற்றச்செயல்கள் போதைப் பொருள் பாவனை மற்றும் மண் கடத்தலை உடனடியாக தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக பொலிஸ் உயர் அதிகாரிகள் வடமாகாண சபையின் அலுவலர்களை உள்ளடக்கி குழுவொன்றை நியமித்து அறிக்கை பெறுமாறும் முதலமைச்சர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி மக்கள் சேவை வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதையும் முதலமைச்சர் வரவேற்றுள்ளார். கைதி ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளின் நலன்கருதி அவரை பிள்ளைகள் வாழும் பிரதேசத்திற்கு அண்மையில் உள்ள சிறைச்சாலைக்கு மாற்றுமாறு அண்மையில் ஜனாதிபதியை சந்தித்தபோது முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்குரிய நடவடிக்கையை உடனே எடுப்பதாக ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியை முதலமைச்சர் தமது கடிதத்தில் நினைவுபடுத்தியுள்ளதாகவும் முதலமைச்சரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. முதலமைச்சர் நிதியத்தின் நியதிச்சட்ட வரைவு 5 வருடங்களாக அங்கீகரிக்கப்படாமை வடமாகாண பொருளாதார விருத்தியை அரசாங்கம் விரும்பவில்லையோ என்று எண்ணத் தோன்றுவதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளார். வேறு பல கூட்டங்கள் இருப்பினும் அவற்றைத் தவணை போட்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மக்கள் சேவையில் கலந்து கொள்ளப் போவதாகவும் வடமாகாண முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.