நியூயோர்க் டைம்ஸூக்கு முன்னாள் ஜனாதிபதி பதில்!

நியூயோர்க் டைம்ஸூக்கு முன்னாள் ஜனாதிபதி பதில்!

by Staff Writer 01-07-2018 | 9:44 PM

நியூயோர்க் டைம்ஸ் வௌியிட்ட புலனாய்வு அறிக்கையிடலின் உள்ளடக்கம் தவறானது எனவும் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி நீண்டதொரு தௌிவுபடுத்தலை வழங்கியுள்ளார்.
எனது, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்காக ச்சைனா ஹாபர் நிறுவனம் நிதி வழங்கவில்லை. எனது நண்பர்கள், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டோருக்கு அந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாலும் சுயாதீனமாக முன்வந்தவர்களினால் குறித்த காசோலை அலரி மாளிகைக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தாலும், இந்த நிதி யாருக்கு வழங்கப்பட்டது, யார் வழங்கியது என்பது தொடர்பில் நியூயோர்க் டைம்ஸ் தௌிவற்ற வகையில் அறிக்கையிட்டுள்ளது. நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை, அரசாங்கத்தின் விசாரணையூடாகவே சில விடயங்களை பெற்றுக்கொண்டதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து எதிர்க்கட்சிக்கு சேறு பூசும் நடவடிக்கையைத் தவிர வேறு எதனையும் முன்னெடுக்கவில்லை என்பதை அனைத்து இலங்கையர்களும் அறிவர்.
இந்நிலையில், நியூயோர்க் டைம்ஸ் அறிக்கை, முந்திய தீர்மானங்கள் உடையதும் சாட்சிகள் அற்றதும் என பல்வேறு தரப்பினரும் கூறுவதாக அறிக்கையொன்றினூடாக, சீன தூதரகம் தெரிவித்துள்ளது.