ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைக்கு எதிராக பேரணி

ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 01-07-2018 | 11:17 AM
அமெரிக்காவிற்கு அகதிகளாக வரும் பெற்றோரிடமிருந்து அவர்களின் பிள்ளைகளைப் பிரிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கையை எதிர்த்து வெள்ளை மாளிகையை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றுள்ளனர். அண்மையில் டொனால்ட் ட்ரம்ப் வௌியிட்ட புதிய அறிவிப்பொன்றின் மூலம், அமெரிக்காவிற்குள் நுழையும் அகதிகளையும் அவர்களின் பிள்ளைகளையும் பிரித்துவைக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில், ட்ரம்பின் உத்தரவின் அடிப்படையில் பெற்றோரிடமிருந்து அவர்களின் பிள்ளைகள் பிரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பும் தமது கண்டனத்தைத் தெரிவித்ததையடுத்து, தனது கொள்கையிலிருந்து பின்வாங்கிய ட்ரம்ப், பிரிக்கப்பட்ட பிள்ளைகளைப் பெற்றோரிடம் ஒப்படைக்க அனுமதித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில், ட்ரம்பின் குடியேற்றக் கொள்கையை எதிர்த்து நேற்று வெள்ளை மாளிகையை நோக்கி ஆயிரக்கணக்கானோர் மற்றும் ஹொலிவுட் பிரபலங்கள் பேரணியாக சென்றுள்ளதுடன், ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தியவாறு அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி சென்றமை குறிப்பிடத்தக்கது. மேலும், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பேரணி நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.