பாராளுமன்றில் மாகாண எல்லை நிர்ணயம் தொடர்பில் விரைவில் விவாதிக்குமாறு Paffrel கோரிக்கை

பாராளுமன்றில் மாகாண எல்லை நிர்ணயம் தொடர்பில் விரைவில் விவாதிக்குமாறு Paffrel கோரிக்கை

பாராளுமன்றில் மாகாண எல்லை நிர்ணயம் தொடர்பில் விரைவில் விவாதிக்குமாறு Paffrel கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

12 Jul, 2018 | 4:04 pm

Colombo (News 1st)  மாகாண எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் Paffrel அமைப்பு சபாநாகர் கரு ஜயசூரியவிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடிதம் ஒன்றினூடாக இந்த விடயம் தொடர்பில் வினவப்பட்டுள்ளது.

மாகாண எல்லை நிர்ணயம் தொடர்பில் ஆராய்வதற்கான குழு கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.

அந்தக் குழுவின் தலைவராக முன்னாள் நில அளவையாளர் நாயகம் கே.தவலிங்கம் நியமிக்கப்பட்டார்.

25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், பொதுமக்களிடம் பெற்றுக்கொண்ட கருத்துகள் அடங்கிய அறிக்கையை கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி துறைசார் அமைச்சிடம் இந்த குழு சமர்ப்பித்தது.

அந்த அறிக்கை மார்ச் மாதம் 21 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு கையளிக்கப்பட்ட போதும் இதுவரையில் அது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி மாகாண எல்லை நிர்ணய அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையில், முதலாவது பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு செய்யப்பட்டமையால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் கடந்த 5 ஆம் திகதி ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்தப்பட்ட போதிலும், மாகாண எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்த தாமதம் தொடர்பில் தௌிவுபடுத்துமாறு Paffrel அமைப்பு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, மாகாண எல்லை நிர்ணயம் தொடர்பில் விரைவில் விவாதத்தை மேற்கொள்ளுமாறு அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகள் தற்போது கலைக்கப்பட்டுள்ளதுடன் வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் கலைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.