மிகச்சிறந்த இணையத்தளமாக Newsfirst.lk தெரிவு

2018ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மிகச்சிறந்த இணையத்தளமாக Newsfirst.lk தெரிவு

by Bella Dalima 30-06-2018 | 5:53 PM
Colombo (News 1st) 2018ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மிகச்சிறந்த இணையத்தளமாக Newsfirst.lk தெரிவுசெய்யப்பட்டுள்ளது. செய்தி இணையத்தளமொன்று அனைத்துத் துறைகளுக்குமான போட்டியில் முதல் இடத்தைப் பெற்றுக்கொண்ட முதற்சந்தர்ப்பம் இதுவாகும். Bestweb.lk யினால் வழங்கப்படும் இந்த விருதுகளில் சிறந்த ஊடக இணையத்தளத்திற்கான தங்க விருதையும் நியூஸ்ஃபெஸ்ட் சுவீகரித்துள்ளமை விசேட அம்சமாகும். சிறந்த ஊடகம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு ஆகிய பிரிவுகளில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னா் நியூஸ்ஃபெஸ்ட் மூன்று தடவைகள் வெள்ளி விருதுகளையும் ஒரு வெண்கல விருதையும் சுவீகரித்துள்ளது. வெண்கல விருது சிறந்த தமிழ் செய்தி இணையத்தளத்திற்காக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. RTIWATCH.LK இணையத்தளத்திற்கு ஒட்டுமொத்த விருதுகளில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. வெண்கல விருது LAUGFS HOLDINGS நிறுவனத்தின் LAUGFS.LK இணையத்தளம் வசமானது. சிறந்த இணையத்தள நிர்மாணிப்பிற்கான விருது 3CS ASIA PVT. LTD வசமானது. சிறந்த அரச நிறுவனத்தின் இணையத்தளத்திற்கான விருதை இலங்கை விமானப்படை தட்டிக்கொண்டதுடன், மிகப்பிரபலமான அரச நிறுவனத்தின் இணையத்தளத்திற்கான விருதை இலங்கை கடற்படை பெற்றுக்கொண்டது. Lk Domainகளை பதிவு செய்யும் நிறுவனத்தினால் பல்வேறு துறைகளுக்கான விருதுகளை Bestweb.lk வழங்கி வருகின்றது. தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், நடுவர்களால் இந்த விருதிற்கு தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். கல்வியலாளர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் வர்த்தக முன்னோடிகள் ஆகியேரை உள்ளடக்கிய உயரிய நடுவர் குழாத்தினால் விருதிற்குரியவர்களுக்கான தெரிவு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.