வட மாகாண முதல்வருடனான நியூஸ்ஃபெஸ்ட்டின் பிரத்தியேக நேர்காணல்
by Bella Dalima 30-06-2018 | 7:29 PM
Colombo (News 1st) வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு இன்று தொலைபேசி ஊடான பிரத்தியேக செவ்வியொன்றை வழங்கியிருந்தார்.
இதன்போது, பா.டெனீஸ்வரனை நீக்கியமையை தடை செய்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
நீதிமன்ற தீர்மானத்தின் பிரதி கிடைக்கப்பெற்ற பின்னர் தான் அதுகுறித்து கருத்துத் தெரிவிக்க முடியும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
மேலும், நீதிமன்ற தீர்மானத்திற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
வட மாகாண முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்திருந்தார்.
இதுபற்றி வட மாகாண முதல்வரின் கருத்தைக் கேட்டபோது, தமக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வர முடியும் எனவும் தாம் அதற்குப் பழகியவர் எனவும் பதிலளித்தார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப்பை அண்மையில் முதல்வர் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியமை ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்ததாக சி.வி.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.
எனினும், பேரவையில் இருந்து தாம் விலகினாலும், இலங்கை தொடர்பான சகல விடயங்களையும் அவதானித்துக்கொண்டிருப்பதாக
அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் கூறியதாக முதல்வர் தெரிவித்தார்.
நேர்காணலை காணொளியில் காண்க...