MTV/MBC தனியார் நிறுவனத்தின் அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்
by Bella Dalima 29-06-2018 | 3:50 PM
Colombo (News 1st) MTV/MBC ஊடக வலையமைப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் MTV Channel தனியார் நிறுவனம் மற்றும் MBC Networks தனியார் நிறுவனம் ஆகியவற்றால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி இரவு MTV/MBC ஊடக வலையமைப்பின் தலைமையகத்திற்கு முன்பாக வெடி கொளுத்தி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கித்சிறி ராஜாபக்ஸவின் வழிநடத்தலின் கீழ் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
MTV/MBC ஊடக நிறுவனம் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தனவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை பரிசீலித்த உயர் நீதிமன்றம், அடுத்த வருடம் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி குறித்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தது.
பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் , நீதியரசர்களான சிசிர டி அப்ரூ மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.