பா.டெனீஸ்வரன் பதவி நீக்கப்பட்டமைக்கு இடைக்கால தடை

பா.டெனீஸ்வரன் பதவி நீக்கப்பட்டமைக்கு இடைக்கால தடையுத்தரவு

by Bella Dalima 29-06-2018 | 4:01 PM
Colombo (News 1st)  வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு பதவியிலிருந்து பா.டெனீஸ்வரனை நீக்கியமைக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தம்மை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிராக பா.டெனீஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைச்சர் பதவியிலிருந்து பா.டெனீஸ்வரன் நீக்கப்பட்டார். பா.டெனீஸ்வரனை பதவியிலிருந்து நீக்கியமையை தடை செய்யும் வகையில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மேன்முறையீட்டு மனு எதிர்வரும் 9 ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்ட பா.டெனீஸ்வரன் பதவி நீக்கப்பட்டதையடுத்து, அவரின் அமைச்சு வட மாகாண முதலமைச்சரினால் திணைக்கள ரீதியாக பிரித்து வழங்கப்பட்டது. அதன் பிரகாரம், மேலதிகமாக போக்குவரத்து அமைச்சினை சி.வி.விக்னேஷ்வரன் தன்வசம் எடுத்துக்கொண்டார். விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சுடன் மீன்பிடி அமைச்சும் இணைக்கப்பட்டு அமைச்சர் கந்தையா சிவநேசனுக்கு வழங்கப்பட்டது. மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கல் - விநியோகம் -தொழிற்துறை, தொழில் முனைவோர் மேம்படுத்தல் ஆகியவற்றுடன் வர்த்தக வாணிபத்தினை இணைத்து அமைச்சர் அனந்திர சசிதரனுக்கு வழங்கப்பட்டது. வட மாகாண அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவில் மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரனுக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. நன்னீர் குளங்களில் மீன்குஞ்சு விடுவதில் பாரபட்சமாக நடந்தமை, வட மாகாணத்தில் எல்லா மாவட்டங்களிலும் நடைமுறையை பின்பற்றாது போடப்பட்ட வீதிகள், நிதி மோசடி, ஒப்பந்த நடைமுறைகளை பின்பற்றாமல் பேருந்து தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. போராளிகள், மாவீரர்கள் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்திற்காக ஒதுக்கப்பட்ட ஒரு கோடி நிதியை சரியான முறைகளை பின்பற்றாது முறைகேடு செய்த குற்றச்சாட்டும் அமைச்சர் பா.டெனீஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்தது. வட மாகாண அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம், வட மாகாண அமைச்சர்களான தி.குருகுலராசா மற்றும் பொ.ஐங்கரநேசன் ஆகியோரை தாமாகவே தமது பதவிகளை தியாகம் செய்யுமாறு முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் வலியுறுத்தினார். அத்துடன், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஏனைய இரு அமைச்சர்களான பா.டெனீஸ்வரன், ப.சத்தியலிங்கம் ஆகியோருக்கு எதிரான விசாரணைகளுக்காக, கூடிய விரைவில் புதிய விசாரணைக்குழு நியமிக்கப்படும் எனவும் முதலமைச்சர் உறுதியளித்தார். இதற்கமைய, இந்த இரண்டு அமைச்சர்களுக்கும் எதிரான விசாரணை நிறைவுபெறும் வரை அவர்கள் விடுமுறை பெற்றுக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். எனினும், இந்த நிபந்தனையை வட மாகாண அமைச்சர்களான பா.டெனீஸ்வரனும் ப.சத்தியலிங்கமும் ஏற்றுக்கொள்ளவில்லை. வட மாகாண முதலமைச்சரின் செயற்பாட்டில் அதிருப்தியடைந்த வட மாகாண சபையின் இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்திருந்தனர். முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனை பதவி நீக்கி, புதிய முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில்லா பிரேரணை ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டது. இந்நிலையில், வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து, வட மாகாண சபை உறுப்பினர்களின் கையொப்பத்துடனான கடிதமொன்று, மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டது. எவ்வாறாயினும், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெறுவதாக, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்ததையடுத்து வடமாகாண சபையில் நிலவிய முரண்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன.