சிறுமி ரெஜினாவின் கொலையை கண்டித்து வட மாகாணத்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு
by Bella Dalima 29-06-2018 | 9:58 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் 6 வயதான சிவனேஷ்வரன் ரெஜினா பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வட மாகாணத்தில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
சுழிபுரம் - காட்டுப்புலம் கிராம மக்கள் மற்றும் மாணவர்கள், படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவிற்கு நீதி கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சுழிபுரம் சந்தியில் இருந்து பேரணியாக சங்கானை பிரதேச செயலகம் வரை மக்கள் சென்றனர்.
ஐந்து கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை பிரதேச செயலக அதிகாரி ஒருவரிடம் கையளித்தனர்.
சிறுமியின் படுகொலை தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, சுழிபுரம் மக்கள் வட மாகாண ஆளுனர் அலுவலக முன்றலிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து யாழ். மாவட்ட செயலகத்திற்கு சென்ற மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை கையளித்தனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.
யாழ். மகளிர் அபிவிருத்தி நிலையம் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததுடன், யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை, சிறுமி ரெஜினாவிற்கு நீதி கோரி முல்லைத்தீவு செம்மலை மகா வித்தியாலய மாணவர்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதான வீதியின் இரு மருங்கிலும் வரிசையாக நின்று மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.